மாஸ்கோ: கனடாவுக்கு இப்போது திரும்பிய பக்கமெல்லாம் சிக்கல் போலவே தெரிகிறது. ரஷ்ய அதிபர் புதின் கனடா சபாநாயகரை இடியட் என விமர்சித்து காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கூறியதே இதற்குக் காரணமாகும்.
அதைத் தொடர்ந்து இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்தியா இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடாவுக்குப் பதிலடி தரும் வகையில் மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டவருக்கு விசா வழங்கப்படாது என்று அறிவித்தது.
கனடாவில் தொடரும் சர்ச்சை: இது ஒரு பக்கம் இருக்கக் கனடாவில் மற்றொரு சர்ச்சை சம்பவம் நடைபெற்றது. அதாவது கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றிருந்தார். அப்போது கனடா நாடாளுமன்றத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், அப்போது அங்கிருந்த முன்னாள் உக்ரைன் வீரரைச் சபாநாயகர் அழைத்துக் கவுரவித்தார். அவருக்கு ஒட்டுமொத்த நாடாளுமன்றம் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. இந்த விவகாரம் தான் சர்ச்சையானது.
ஏனென்றால் கனடா நாடாளுமன்றம் கவுரவித்த அந்த நபர் உக்ரைன் விடுதலைக்காகப் போராடியவர் இல்லை.. மாறாகப் பல லட்சம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் நாஜி படைகளைச் சேர்ந்தவர். இது உலகெங்கும் இருந்த யூதர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபாநாயகர் அந்தோனி ரோட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.