தெஹ்ரான்: ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 103 பேர் பலியாகியுள்ளனர். 170-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரிமோட் மூலம் 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஆளில்லா டிரோன் தாக்குதலில் ஈரான் புரட்சிகர ராணுவப் படையின் ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். காசிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று ஈரான் நாட்டில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது கல்லறை அருகே நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கூடி இருந்தனர். அப்போது அங்கு பயங்கர இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள நகரமான கெர்மான் மாகாணத்தில் ஜெனரல் காசிம் சுலைமானி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 170-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சுலைமானி கல்லறைக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். முதல் குண்டு ஜெனரல் சுலைமானியின் கல்லறையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் வெடித்துள்ளது. இரண்டாவது குண்டு ஒரு கிலோமீட்டர் தொலைவில் அடுத்த 10 நிமிடங்களில் வெடித்துள்ளது. முதல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் செஞ்சிலுவை சங்கத்தினர் ஏராளமானோர் ஈடுபட்டு அங்கு குவிந்திருந்த சூழலில் 2வது குண்டு வெடித்ததில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் செஞ்சிலுவை சங்கத்தினரும் உள்ளனராம். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.