டோக்கியோ: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், பிறகு சுனாமி என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலையில், இன்று சுனாமி எச்சரிக்கைகளை ஜப்பான் திரும்ப பெற்றுள்ளது. ஜப்பானில் 155 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஜப்பான் பாதிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானில் நேற்று அந்நாட்டு நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் ஜப்பான் மக்கள் பீதியில் உறைந்தனர்.
அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் குலுங்கின. விரிசல்களும் ஏற்பட்டது. சாலைகளில் பெரிய அளவில் விரிசல் காணப்பட்டது. இஷிகாவா மாகாணத்தில் உள்ள வஜிமா நகரில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கேஸ் குழாய்கள் உடைந்தது. இதனால் கேஸ் வெளியேறியதால் தீப்பிடித்தது.
சுனாமி எச்சரிக்கை: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
24 பேர் பலி: இதைத்தொடர்ந்து கொக்கைடோ தீவு முதல் கியுசு தீவு வரை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களில் ஜப்பானின் மேற்கு கடற்பகுதிகளை 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கின. பல இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.