இந்தியா, டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சியில், பிரபல ஹிந்தி பாடலுக்கு மணமகன் நடனமாடியதால், கோபமடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தைப் பாதியில் நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்ணின் வீட்டில் நடந்த திருமணத்தைக் காண, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் குவிந்தனர்.
திருமணத்துக்கு முந்தைய நாள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நடந்த மணமகன் ஊர்வலத்தில், பேண்டு வாத்தியங்கள் முழங்க மணமகன் மற்றும் அவரது வீட்டார் பங்கேற்றனர். ஆடல் - பாடலுடன் உற்சாகமாக வந்த ஊர்வலம், மணப்பெண்ணின் வீட்டை அடைந்தது. மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் ஒருவரையொருவர் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர். உறவினர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பாடலொன்று ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்ட மணமகனின் நண்பர்கள் உற்சாக நடனத்தில் ஈடுபட்டனர். மணமகனையும் ஆடச் சொல்லி அவர்கள் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த பாடலுக்கு மணமகன் மகிழ்ச்சி பொங்க நடனமாடினார்.
இதனால், திடீரென ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, பாரம்பரியமிக்க தங்கள் குடும்பத்தினர் முன்பு மணமகன் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறி, நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்து வெளியேறினார். அது மட்டுமின்றி உடனடியாக திருமணத்தை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதனால், மணப்பெண் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால், மகிழ்ச்சி ததும்ப துவங்கிய திருமண கொண்டாட்டம் களையிழந்தது. மணமக்கள் இருவரும் கண்ணீர் மல்க பிரிந்தது காண்போரைக் கலங்கச் செய்தது.







