சிங்கப்பூர், அக்டோபர்.25-
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் 47 வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் செல்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதியமைச்சருமான வோங், ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதுடன் அதன் தொடர்பான மற்ற மாநாடுகளிலும் கலந்து கொள்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியான் அமைப்புக்குத் தலைமைத்துவப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, ‘அனைவரையும் அரவணைத்தல், நீடித்த நிலைத்தன்மை’ எனும் கருப்பொருளுடன் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
உலக அளவில் நிலவும் அரசியல், பொருளியல் சவால்களுக்கு இடையில் முன்னோக்கிய, பிணைப்புமிக்க, மீள்திறன் கொண்ட ஆசியானை உருவாக்க இந்த வட்டாரம் எடுக்கும் முயற்சிகள் குறித்து இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படவிருக்கிறது.








