நடிகர் சூர்யா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக இருக்கும் 'கர்ணா' படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூர்யாவின் நடிப்பில் தற்போது 'கங்குவா' படம் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயார் ஆகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா. முன்னதாக இவரது நடிப்பில் ரிலீசான சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் விமர்சகர்கள், பிரபலங்கள் என பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அது மட்டும் இல்லாமல் இந்தப்படங்களில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று ஜானர் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் பிரம்மாண்ட தயாரித்து வருகிறார். மேலும், இப்படத்தில் சூர்யா 10 கெட்டப்களில் நடிப்பதாகவும், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.