புதுடெல்லி, டிசம்பர்.17-
டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனியால் விமானச் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக டில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், 6 அடி தூரத்தில் சென்ற வாகனங்கள் கூட கண்ணுக்கு தென்படவில்லை. வாகன போக்குவரத்து போல, விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வட மாநிலங்களில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான நிலையத்தில் இருந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இது தொடர்பாக இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ''பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விழிப்புடன் இருக்க வேண்டும்.
விமான நிறுவனங்களின் இணையதளத்தில் பயணிகள் தங்கள் விமானங்களின் தற்போதையை நிலவரங்களை சரிபார்க்க வேண்டும். வட இந்தியாவில் குளிர்கால என்பதால் மூடுபனி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.








