வாஷிங்டன், ஆகஸ்ட்.23-
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி ஆகஸ்ட் 27ல் நிச்சயம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1ல் 25 சதவீத வரி விதித்தார். அதை தொடர்ந்து இரண்டாம் நிலை வரி என்ற பெயரில் கூடுதலாக 25 சதவீத வரி விதித்து அதிர வைத்தார். இந்த இரண்டாம் நிலை வரி ஆகஸ்ட் 27ல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இது அமலுக்கு வந்தால் இந்தியத் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்படும். இதை குறைப்பது பற்றி பேச்சு நடத்த அமெரிக்க வர்த்தக குழுவினர் கடந்த வாரம் இந்தியா வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் போர் நிறுத்த பேச்சில் கடந்த வாரம் ஈடுபட்டார். இதனால் இந்தியாவுக்கான வரி குறைக்கப்படும் என்ற தகவல் வெளியானது.
ஆனால் அதை மறுக்கும் வகையில் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தேவையே இல்லை. அவர்கள் தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் லாபத்திற்காக வாங்குகிறார்கள். இதனால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுகின்றனர். இந்த ரத்த கறையில் இந்தியாவுக்கும் பங்கு உள்ளது.
அதே போல் அமெரிக்காவிடம் அதிக பொருட்களை விற்கும் இந்தியா, எங்களிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை. சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடன் நெருக்கம் காட்டுகின்றனர்.
எனவே இந்தியாவுக்கான இரண்டாம் நிலை வரி விதிப்பு நீட்டிக்கப்படாது. ஆகஸ்ட் 27ல் வரி அமலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டார்.