ஹைதராபாத், ஜூலை.19-
தாய்லாந்தின் புக்கெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட 16 நிமிடங்களில், ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் இன்று காலை 6.41 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட்டுக்குப் புறப்பட்டது.
ஆனால், புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பி வந்தது. விமானம் தாய்லாந்திற்கு செல்லாமல், மீண்டும் தரையிறங்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறு தான் அவசர தரையிறக்கத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த சில தினங்களாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதும், புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்படுவதும், தாமதமாக இயக்கப்படுவதும் பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.








