Sep 15, 2026
Thisaigal NewsYouTube
மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு
உலகச் செய்திகள்

மாலத்தீவு சென்ற பிரதமர் அன்வார் இப்ராகிமிற்கு அரசு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு

Share:

இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இன்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டில் அரசாங்க மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி காலை 9.29 மணிக்கு இஸ்ஸுடின் ஜெட்டி சென்றடைந்த பிரதமர் அன்வாரை, மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹமட் முய்ஸ்ஸூ வரவேற்றார். தொடர்ந்து, உள்ளூர் பள்ளி மாணவர்களின் கலாசார நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னர் மாலத்தீவின் தேசிய தற்காப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அன்வார் ஏற்றுக் கொண்டதுடன், 21 குண்டுகள் முழங்கும் மரியாதையும் அளிக்கப்பட்டது.

நெகாராகூ மற்றும் மால்டிவ்ஸ் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்வார் மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

அதன் பின்னர் ரிபப்லிக் ஸ்குவேர் பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரம் வரை, பாரம்பரிய உடையணிந்த கலைஞர்கள் மற்றும் உள்ளூர் மேளதாளங்களுடன் நடைபெற்ற கலாசார ஊர்வலத்தில் அன்வார் மற்றும் முய்ஸ்ஸூ இணைந்து சென்றனர்.

தொடர்ந்து அதிபர் அலுவலகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து, மலேசியா - மாலத்தீவிற்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும், பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை இரு தலைவர்களும் பார்வையிடுவதுடன், பின்னர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பிலும் பங்கேற்க உள்ளனர்.

மலேசியா மற்றும் மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் 1968-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், இந்தப் பயணம் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News