பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கேரள மாநிலப் பயணமானது மலேசியா மற்றும் தென்னிந்தியா இடையே ஆரோக்கிய நல்வாழ்வு சுற்றுலா, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து தென்னிந்தியாவிற்கான மலேசிய துணைத் தூதர் கே சரவண குமார் கூறுகையில், கேரள மாநிலத்திற்கு ஆயுர்வேதா மருத்துவத்தில் சிறப்பான அனுபவம் இருப்பதுடன், பாரம்பரிய மருத்துவத்தையும் நவீன மருத்துவமான அலோபதியையும் ஒருங்கிணைக்கும் அணுகுமுறைகளிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார்.
இதன் மூலம் மலேசியாவின் நல்வாழ்வு சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மலேசியா மற்றும் தென்னிந்தியா இடையே குறிப்பாக கேரளா மற்றும் தமிழ் நாட்டிற்கு இடையே கணிசமான சுற்றுலாப் பயணிகள் பரிமாற்றம் இருப்பதால், சுற்றுலாத் துறையில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளதாக கே சரவண குமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், கேரளாவில் இயற்கை வளம், கலாசார பாரம்பரியம், நிலையான வளர்ச்சி, தூய்மையான எரிசக்தி மற்றும் புதிய செயல்பாடுகள் குறித்து இருதரப்பும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு கேரளாவிற்கு வருகை புரியவிருக்கும் அன்வார் இப்ராஹிம், ஜாமியா மார்கஸ் எனப்படும் இஸ்லாமிய கல்வி மற்றும் சமூக அமைப்பில், இந்தியாவின் போற்றத்தக்க இஸ்லாமிய அறிஞர் ஷைக் அபுபாக்கார் அஹ்மாட்டைச் சந்தித்து சமூக மேம்பாடு, கல்வி முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்கம் குறித்து கலந்துரையாட உள்ளார்.
மேலும், கோழிக்கோடு பகுதியில் இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்களை சந்தித்து வணிகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேச உள்ளார்.
அதேவேளையில் நாளை கேரளா முதலமைச்சர் வி டி சதீசன் மற்றும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரையும் அன்வார் இப்ராஹிம் சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் மலேசியா - கேரளா இடையே இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.








