இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் மோசமான வானிலை காரணமாக 243 பேருடன் சென்ற விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், கடலில் இருந்து 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 140 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
சுராபாயா நகரிலிருந்து பஞ்சார்மாசின் நோக்கிச் சென்ற அக்கப்பலானது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் கடைசி இருப்பிடம் பஞ்சார்மாசின் நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.
கடுமையான வானிலை மற்றும் ஏறக்குறைய 3 மீட்டர் உயரம் வரையிலான பேரலைகள் காரணமாக மீட்புப் பணிகளுக்கு சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மீட்புக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








