தோஹா, கத்தார், ஏப்ரல் 18-
உலக அளவில் சிறந்த விமானநிலையங்களை பட்டியலிடும் நிறுவனம் இந்த ஆண்டிற்கான தனது பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
"உலகின் சிறந்த விமான நிலையம்" எது என்ற கிரீடத்திற்கான பந்தயம் சமீபத்திய ஆண்டுகளில் இரண்டு மிகசிறந்த விமான நிலையங்களுக்கு இடையே உள்ள ஒரு பந்தையமாகவே இருந்து வந்தது என்றால் அது மிகையல்ல. தோஹாவின் ஹமாத் இன்டர்நேஷனல் மற்றும் சிங்கப்பூர் சாங்கி ஆகியவை தான் அந்த போட்டியில் இருந்த ஏர்போர்ட்ஸ்.

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான Skytrax World Airport விருதுகளில், ஏற்கனவே 12 முறை வெற்றிவாகை சூடிய சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, ஏற்கனவே இரண்டாம் இடத்தில் இருந்த தோஹா ஹமாத் விமான நிலையம் இந்த முறை முதலிடத்தை பிடித்துள்ளது. இது கத்தார் நாட்டில் உள்ள விமான நிலையமாகும்.
ஆசியாவிற்கான வலுவான போட்டியில், சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மேலும் 2024ம் ஆண்டில் குடும்பங்கள் அதிகம் விரும்பிய விமானநிலையமாக அது திகழ்கின்றது. அதே நேரத்தில் டோக்கியோவின் இரட்டை விமான நிலையங்களாக ஹனேடா மற்றும் நரிட்டா நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றன.

ஹாங்காங் விமான நிலையம் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது, அந்த நகரம் பெருந்தொற்றில் சந்தித்த பெரும் பின்னடைவுக்கு பிறகு இப்பொது 22 இடங்கள் முன்னேறி 11 வது இடத்திற்கு வந்துள்ளது. மக்களும் அந்த விமான நிலையத்தை இப்பொது மீண்டும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அமெரிக்க விமான நிலையங்கள் அட்டவணையின் உச்சியில் எங்கும் காணப்படவில்லை, மிக உயர்ந்த தரவரிசையான சியாட்டில்-டகோமா ஆறு இடங்கள் சரிந்து 24 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. ஐரோப்பா தொடர்ந்து வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, பாரிஸ் சார்லஸ் டி கோல், முனிச், சூரிச் மற்றும் இஸ்தான்புல் ஆகிய விமானநிலையங்கள், அவை முதல் 10 இடங்களை தக்கவைத்துக் கொண்டன.