லண்டன்: 6 அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு பயணிக்கலாம் என பிரிட்டன் அரசு அறிவித்து உள்ளது.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விமான டிக்கெட்டுடன், ஒருவர் தங்கள் நாட்டிற்கு வரலாம் என்று அந்நாட்டு அரசு வழங்கும் அனுமதியான விசாவும் அவசியம். இதற்காக பல ஆயிரங்கள், லட்சங்களை செலவு செய்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். சுற்றுலா, வேலை, கல்வி, ஆன்மீக யாத்திரை என பெயர்களில் விசா வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சில நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்துகொண்டு விசா இல்லாமல் அந்த நாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு நுழைய அனுமதி வழங்குகிறார்கள்.
சுற்றுலா துறையை வளர்க்கவும், உள்நாட்டு வணிகத்தை பெருக்கவும் அதிகளவிலான வெளிநாட்டவர்களை தங்கள் நாட்டிற்குள் விசா இல்லாமல் அனுமதிக்கும் யுக்தியை சில நாடுகள் பின்பற்றி வருகிறார்கள். அதேபோன்று எல்லையோரம் அமைந்து அண்டை நாடுகளுக்குள் சென்று வரவும் விசா இல்லாத அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்கு நுழைய பிரிட்டன் அரசு தற்போது அனுமதி அளித்து உள்ளது. ஜிசிசி எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் அங்கம் வகித்து வரும் நாடுகள் மற்றும் ஜோர்டானில் வசித்து வருபவர்கள், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் விசா இல்லாமல் நுழையும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் ஆகிய நாடுகள் விசா இல்லாமல் பிரிட்டனுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு பிறகு சென்று வரலாம்.
பிரிட்டனுக்கு செல்ல விரும்புபவர்கள் விசாவுக்கு ETA எனப்படும் மின்னணு பயண அனுமதியை வாங்கி இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கூறி இருக்கிறது. நீங்கள் நினைக்கலாம்.. மேற்குறிப்பிட்டு நாடுகளின் பட்டியலில் கத்தார் இல்லையே என்று.. பிரிட்டன் முதன் முதலில் விசா இல்லா அனுமதியை நடைமுறைப்படுத்தியதே கத்தாருக்குதான். கடந்த 2023 நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் கத்தார் மக்கள் ஈடிஏ மூலமாக பிரிட்டன் சென்று வருகிறார்கள்.