டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திடீரென கூறிய சில கருத்துகள் இப்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்தே வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரி தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதல் தொடங்கிப் பல வகை தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.
இதையடுத்து இஸ்ரேல் பதிலடியில் இறங்கியது. காசா மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்த கட்டமாக முழு வீச்சில் தாக்குதலையும் தொடங்குகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்: இப்படிக் காசா மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்யும் வகையில் இஸ்ரேலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வந்தது.