இந்தியாவுக்கு போட்டியாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவால் ஏவப்பட்ட லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. தென் துருவத்தில் ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் திட்டத்துடன் களமிறக்கப்பட்ட ரஷ்யாவின் விண்கலம் திட்டம் தோல்வி அடைந்தது ஏன் என பார்க்கலாம்.
நிலவின் தென்துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யவில்லை. எனவே, தென் துருவத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திரயான் விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக சென்றது. தற்போது வரை சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகிறது. நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்த பிறகு பிறகு ஆர்ப்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கமான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18 ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைந்தபட்சமாக 113 எனவும், அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாரலை விக்ரம் லேண்டர் நிலவை இன்னும் கிட்ட நெருங்கி உள்ளது. இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டருக்கும், நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது குறைந்தபட்சமாக 25 கிலோமீட்டராகவும், அதிகபட்சமாக 134 கிலோமீட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளது.