பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கணமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் வழக்கத்தைவிட முறையே 784%,500% மழை பதிவாகி உள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் மிகவும் மோசமான வெள்ளம் என சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது. சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், வீடுகள், விவசாய நிலங்கள் ஆகியவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக முன்பு கணிக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.14.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.