மண்டி, செப்டம்பர்.16-
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் கடுயமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை மழையின் காரணமாக முடங்கியது.
மண்டி பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டியது. மழை காரணமாக சோன்காட் நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
தர்மபூர் நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வெள்ளம் புகுந்ததால் அரசு பஸ்கள், ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை, வெள்ளத்திற்கு அங்கு இருந்த மாணவர்கள் விடுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளது. விடுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 150க்கும் அதிகமான மாணவர்கள், கட்டடங்களின் கூரைகளுக்கு சென்று பாதுகாப்பாக தங்கி உயிர் தப்பினர். மஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
மழையின் பாதிப்பை அறிந்த பேரிடர் குழுவினர், உள்ளூர் போலீசார் மீட்புப் பணிகளில் இறங்கினர். மீட்பு பணிகளுக்கு இடையே அதிகாரிகள் சேதத்தை மதிப்பீடு செய்து வருகின்றனர். மழையில் சிக்கி பலியாகி உள்ளனரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், ஒருவர் மட்டுமே காணாமல் போய் உள்ளார். அவரை கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அண்மைய கனமழைக்கு ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் 404 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.