வாஷிங்டன், ஆகஸ்ட்.08-
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.
இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காட்டு வரியை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான விலை கடுமையாக உயரும் என்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனங்களான வால்மார்ட், அமேசான், டார்கெட் மற்றும் கேப் உள்ளிட்டவை இந்தியாவில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை நிறுத்தி வைத்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை துணி உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர். மேலும், கூடுதல் வரிச் சுமையை ஏற்றுமதியாளர்களே ஏற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் மூலம், வரிச் செலவுகள் 30 முதல் 35 விழுக்காடு வரை கூடுதலாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த வரி உயர்வால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்ப மாட்டார்கள். இதனால், அமெரிக்க ஆர்டர்கள் 40 முதல் 50 விழுக்காடு வரை குறையலாம்.