சென்னை, ஆகஸ்ட். 15-
கோலாலம்பூரில் இருந்து 158 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் கேரளா, கோழிக்கோடு நோக்கிப் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம் ஒன்று, இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சென்னை வான்வெளியில் ஏர் ஆசியா விமானம் பறந்த கொண்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி அறிந்தார்.
உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட அவர், அவசரமாக விமானத்தைத் தரையிறக்க அனுமதி கோரினார். அவர்களும் அனுமதி கொடுத்த நிலையில், விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால், விமானப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து, அவர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பிறகு, விமானத்தில் கோளாறு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்பப் பிரச்னை சரி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இன்று மாலை விமானம் கோழிக்கோடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.