Oct 10, 2026
Thisaigal NewsYouTube

கராச்சியில் நில அதிர்வால் குழப்பம்: சிறைச் சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம்: சிறைச் சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்

கராச்சி, ஜூன்.03-

பாகிஸ்தான், கராச்சியில் அதி உயர் பாதுகாப்பு கொண்ட சிறையிலிருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. கராச்சியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. அதன் காரணமாக கராச்சியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு கொண்ட மாலிர் சிறையிலும் குழப்பம் ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அறைகளில் இருந்து பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடி இருக்க, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென சிறை வாயிலைத் திறந்து கொண்டு தப்பிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அங்கே வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றிய கைதிகள் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தினர்.

இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்ட வேளை, 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலைச் சுவரை உடைத்துக் கொண்டு தப்பி உள்ளனர்.

தப்பிய கைதிகளில் பலர் கராச்சி நகரின் வீதிகளில் உலாவத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணியில் இறங்கிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 75 கைதிகளைச் சிறைபிடித்தனர். தப்பிய பலரில் பெரும்பாலானோர் கடும் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள்.

நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து தணிக்கை செய்யப்பட்டு கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →