ஆக்லாந்து: ரேடியோ ஜாக்கி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 3 காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் குற்றவாளிகள் என்று நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த சில காலமாகவே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறித்த செய்திகள் உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பல மாதங்களாகவே பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியத் தூதரகம், இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கிடையே கனடாவில் ஹர்தீப் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டார். அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பைக் கிளப்பினார். மேலும், அமெரிக்காவும் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொலை செய்ய முயன்றாக இந்தியர் ஒருவரைக் கைது செய்து பகீர் கிளப்பியது.
காலிஸ்தான்: இப்படிக் கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே நியூசிலாந்து நாட்டில் ரேடியோ ஜாக்கி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 3 காலிஸ்தான் பிரிவினைவாதிகளைக் குற்றவாளிகள் என்று நியூசிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காலிஸ்தான் சித்தாந்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து பேசி வந்த ஆக்லாந்தைச் சேர்ந்த வானொலி தொகுப்பாளர் ஹர்னெக் சிங் என்பவரை இந்த 3 பேர் இணைந்து கொலை செய்ய முயன்றுள்ளனர். ஹர்னெக் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மூன்று பேரும் இப்போது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.