ரோம்: ஐரோப்பாவின் மிக உயரமான எரிமலையான எட்னா மலை நேற்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.
நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கின்றன. ரிங் ஆப் பையர் எனப்படும் இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடக்கும்.
ஆனால், இங்கே மட்டும் தான் எரிமலை வெடிப்பு நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. பூமியில் பல்வேறு இடங்களிலும் இந்த எரிமலைகள் உள்ளன. அவை வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
எரிமலை வெடிப்பு: பூமிக்கு அடியில் இருக்கும் டெக்டோனிக் தகடுகள் மோதும் போது எரிமலைகள் உருவாகின்றன. எரிமலைகள் எப்போதும் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் அவை வெடித்துச் சிதறும் போது ஏற்படும் பாதிப்பு பேரழிவாகவே இருக்கும். அதில் இருந்து பாயும் எரிமலை பிழம்பு செல்லும் இடத்தில் எல்லாம் பேரழிவை ஏற்படுத்தும். அப்படி ஐரோப்பாவில் மிக ஆக்டிவாக இருக்கும் எரிமலைகளில் ஒன்று எரிமலை எட்னா.