Oct 19, 2025
Thisaigal NewsYouTube
சிறையில் தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு தீபாவளி பரிசு.. விடுதலை செய்யும் பாகிஸ்தான் அரசு
உலகச் செய்திகள்

சிறையில் தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு தீபாவளி பரிசு.. விடுதலை செய்யும் பாகிஸ்தான் அரசு

Share:

கராச்சி: பாகிஸ்தான் சிறையிலிருந்து 80 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பாகிஸ்தான் அரசு இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலம் அரபிக்கடலை எல்லையாக கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க அரபிக்கடலுக்குள் செல்லும்போது வழி தவறி பாக் எல்லைக்குள் தாண்டி சென்றுவிடுவதுண்டு. பல நேரங்களில் இப்படி எல்லை மீறும் படகுகளை அந்நாட்டின் கடற்படை விரட்டி அடித்துவிடும். சில நேரங்களில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள். இப்படியாக தற்போது வரை சுமார் 260 பேர் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் குஜராத்தை சேர்ந்த மீனவர் பூபத்பாய் வாலா என்பவர் மூச்சு திணறல் காரணமாக அந்நாட்டு சிறையிலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உடல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிறையில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றன. மத்திய அரசும் பாகிஸ்தான் அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்நிலையில்தான் அந்நாட்டு சிறையிலிருந்து சுமார் 80 இந்தியர்கள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2014ம் ஆண்டு நல்லெண்ண அடிப்படையில் அந்நாட்டின் சிறையிலிருந்து சுமார் 151 இந்திய மீனவர்களை விடுவித்தார். தற்போது நான்கு ஆண்டுகள் நாடு கடத்தலுக்கு பின்னர் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ள நிலையில் தற்போது 80 இந்தியர்களை விடுவிக்க பாக். முன்வந்திருக்கிறது.

கராச்சியில் உள்ள லாண்டி சிறையில் உள்ள 80 இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப்பட்டால் அவர்கள் நாளை வாகா எல்லை வழியாக அவர்கள் இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதனையடுத்து தீபாவளிக்கு அவர்கள் குடும்பத்துடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News