கோலாலம்பூர், அக்டோபர்.23-
மலேசியாவிற்கும், இந்தியாவிற்கும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி பூண்டுள்ளனர்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இரு தரப்பு உறவுகளை வியூக முறையின் வாயிலாக மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு தொலைபேசி உரையாடலில் இது குறித்து தாம் விவாதித்ததாக டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு மட்டுமின்றி வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் மலேசியாவின் முக்கிய வர்த்தகச் சகாவாக இந்திய விளங்குகிறது என்று அன்வார் தெரிவித்தார்.
வார இறுதியில் கோலாலம்பூரில் தொடங்கவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கும் உபசரணை நாட்டுத் தலைவர் என்ற முறையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இந்திய பிரதமருடன் விரிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தீபாவளி இன்னமும் கொண்டாடப்படுவதால், ஆசியான் மாநாட்டில் மோடி, ஓன்லைன் மூலம் பங்கேற்பார். அவரின் முடிவைத் தாம் மதிப்பதாக தமது முகநூலில் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய பிரதமருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.








