ஜகார்த்தா, டிசம்பர்.10-
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஏழு மாடி அலுவலகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி கர்ப்பிணி உட்பட 22 பேர் பலியாகினர்.
ஜகார்த்தாவின் கேமயோரன் பகுதியில் அந்த ஏழு மாடிக் கட்டடம் உள்ளது. பல்வேறு அலுவலகங்கள் செயல்படும் இந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் திடீரென தீப்பிடித்தது. இது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. மதிய உணவு இடைவேளை என்பதால், பலர் உணவு சாப்பிட வெளியே சென்றிருந்தனர்.
தீயணைப்புத் துறையினர், 29 வாகனங்களில் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கட்டடத்திற்குள் சிக்கியிருந்தவர்களை வானுயர ஏணியை பயன்படுத்தி மீட்டனர். எனினும் மூச்சுத் திணறல் மற்றும் தீயில் கருகி ஏழு ஆண்கள், 15 பெண்கள் மற்றும் கர்ப்பிணி உட்பட 22 பேர் பலியாகினர்.
விசாரணையில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் விற்பனை நிலையத்தில், 'பேட்டரி'யில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.








