டெல் அவிவ்: காசா மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக ஆழமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நிலையில், எதிரிகளின் கொடூரமான செயல்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என இஸ்ரேல் கூறியிருக்கிறது.
காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதுதான் சாக்கு என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாகதான் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.