பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தனிமை என்பது எப்போதுமே ரொம்ப கொடியது. தனிமை காரணமாக மனச்சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் குடும்ப அமைப்பு வலுவாக இருப்பதால் தனிமையால் ஏற்படும் பிரச்சினை இங்குக் குறைவு.
ஆனால், வெளிநாடுகளில் அப்படியில்லை. தனிமையால் ஏற்படும் குற்றங்களும்.. இதனால் ஏற்படும் உளவியல் நோய்களும் அங்கே ரொம்ப அதிகம்.. அப்படி தனிமையில் இருந்த பெண் ஒருவர் செய்த காரியம் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துவிட்டது.
இந்தச் சம்பவம் ஜப்பான் நாட்டில் நடந்துள்ளது. அங்கே ஜப்பானில் கடந்த 2.9 ஆண்டுகளில் மட்டும் பெண் ஒருவர் போலியான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். அதுவும் ஏதோ ஓரிரு முறை இல்லை... மொத்தம் 2,761 முறை தவறான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் 51 வயது பெண் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில் வசித்து வரும் பெண் ஹிரோகோ ஹடகாமி.. 51 வயதான இந்தப் பெண் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். உள்ளூர் தீயணைப்புத் துறையைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு அவசரக் காரணங்களைக் கூறி அவர் தனது வீட்டிலிருந்தும் அண்டை வீடுகளில் இருந்தும் பல முறை பலமுறை அழைப்புகளை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மே 2023 வரை வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாகக் கால் செய்துள்ளார்.