சிங்கப்பூர், ஆகஸ்ட்.04-
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில் விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றத்தை மலேசிய சொத்துடைமை கோடீஸ்வரர் ஓங் பெங் செங், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டார் பயணம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததை சிங்கப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி லீ லிட் செங் முன்னிலையில் ஓங் பெங் செங் ஒப்புக் கொண்டார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தம்முடன் கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் ஈஸ்வரனுக்கு ஓங் பெங் செங் அழைப்பு விடுத்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் ஈஸ்வரன் தமது விருந்தினர் என்றும், தம்முடன் தமக்குச் சொந்தமான விமானத்தில் கட்டாருக்குச் செல்லலாம் என்றும் ஓங் பெங் செங் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தங்குமிடம் உட்பட பயணச் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்றுக் கொள்வதாக ஈஸ்வரனிடம் ஓங் பெங் செங் தெரிவித்துள்ளார். அவரின் அழைப்பை அமைச்சர் ஈஸ்வரன் ஏற்றுள்ளார். பயணத்துக்காக ஈஸ்வரன் அவசர விடுப்புக்கு விண்ணப்பம் செய்தார்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓங்கிற்குச் சொந்தமான விமானத்தில் ஈஸ்வரன், கட்டார் தலைநகர் டோஹாவிற்குப் பயணம் செய்தார். டோஹாவில் ஈஸ்வரன் ஆடம்பரத் தங்கும் விடுதியான ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார். அங்கு ஓர் இரவுக்கான ஹோட்டல் அறைச் செலவு 4 ஆயிரத்து 737 சிங்கப்பூர் டாலராகும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.