Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 4 மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய 4 மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

புதுடெல்லி, மே.28-

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு முன்னோட்டமாக கடந்த 7 ம் தேதி நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

போர் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு முன் 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது பயிற்சி அளிக்கப்பட்டது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டாலும், இருநாட்டு உறவில் இன்னும் விரிசல் உள்ளது. தாக்குதல் காலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்திய மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்களை வீசியது. இதனை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்நிலையில், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் மற்றும் விமானத் தாக்குதல் தொடர்பான சைரன் ஒலி சரியாக செயல்படுகிறதா? தீயணைப்புத்துறை, மீட்புப்படையினர் மற்றும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்பதற்கானத் திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடைபெற உள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →