Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயில்! அயோத்தியை தொடர்ந்து.. அபுதாபியில் கோயிலை திறக்கிறார் மோடி
உலகச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயில்! அயோத்தியை தொடர்ந்து.. அபுதாபியில் கோயிலை திறக்கிறார் மோடி

Share:

அபுதாபி: அயோத்தியில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக வரும் 14ம் தேதி ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான துபாயில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கோயிலை திறந்து வைத்து, பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். இதனை தொடர்ந்து வரும் 14ம் தேதி அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்க உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோயில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். இத்துடன் கூடுதலாக 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019ம் ஆண்டு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இக்கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் இருக்கின்றன. இந்த கோபுரங்கள் அனைத்தும் அபுதாபியின் சிறந்த கட்டிடங்களின் அடையாளமாக திகழ்கிறது. கோயிலின் வளாகத்தில் பார்வையாளர் மையம், பிரார்த்தனை கூடங்கள், தோட்டங்கள், கற்றல் பகுதிகள் போன்றவை உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) சார்பில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 14ம் தேதி கோயில் திறப்பு விழா இருப்பதால் BAPS தலைவர் ஆன்மீகத் தலைவரான சுவாமி மஹந்த் சுவாமி மகராஜ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருக்கிறார். இவையெல்லாவற்றையும் விட மேலான விஷயம் என்னவெனில், ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படும் முதல் இந்து கோயில் இதுதான் என்பதாகும். எனவே அயோத்தியை தொடர்ந்து இந்த கோயில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Related News