கராச்சி: பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உடல் நிலை குறித்து உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக யூகங்கள் பரவினாலும் இந்த தகவல் தற்போது வரை உறுதி செய்ய முடியவில்லை.
கடந்த 1993- ஆம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 250- க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 750- க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். உலக அளவில் நடத்தப்பட்ட மிக மோசமாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருகிறார். தாவூத் இப்ராகிம் தலைக்கு ரூ.25 லட்சம் சன்மானமும் என்.ஐ.ஏ விதித்துள்ளது. இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி லிஸ்டில் முதலிடத்தில் இருக்கும் தாவூத் இப்ராகிம் குறித்து அவ்வப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகி வரும்.
இந்த நிலையில், தவூத் இப்ராகிமுக்கு அடையாளம் தெரியாத நபரால் விஷம் வைக்கப்பட்டதாகவும் ஆபத்தான நிலையில், கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றன. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமே வெளியாகவில்லை. பாகிஸ்தானின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களான Geo டிவி மற்றும் டான்(dawn) ஆகியவையும் இது குறித்த எந்த செய்தியையும் வெளியிடவில்லை.