பியாங்யாங்: வடகொரியாவில் அணு ஆயுத சோதனை தளம் அருகே நிலநடுக்கம் பதிவாகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா சமீபத்தில்தான் புதிய உலைகளை கட்டி வந்தது. இந்நிலையில் இந்த நிலநடுக்கம் கொரிய தீபகற்பம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்கா என்னதான் பலமிக்க நாடாக இருந்தாலும், அதனை வடகொரிய அசலாட்டாக எதிர்த்து வருகிறது. இதற்கு காரணம் வடகொரியாவிடம் இருக்கும் ஆயுதங்கள்தான். அமெரிக்காவிடம் இல்லாத ஆயுதங்களை கூட வடகொரியா தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த ஆயுதங்கள் நேரடியாக அமெரிக்காவை தாக்கி அழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே அமெரிக்கா, ஜப்பானையும், தென் கொரியாவையும் தன் கைக்குள் போட்டுக்கொண்டு வடகொரியாவை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது.
இருப்பினும், தற்போது வடகொரியா சில அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதாவது, அணு ஆயுத தடவாளத்தில் புதிய உலையை தயார் செய்து வருகிறது. இதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றாலும், கூடவே அணு ஆயுதங்களுக்கு தேவையான புளூட்டோனியத்தையும் தயாரிக்க முடியும். இதுதான் அமெரிக்காவின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. எனவே வடகொரியாவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.