பாக்தாத்: திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒட்டுமொத்த குடும்பத்தைப் பறிகொடுத்த மணப்பெண் அதிர்ச்சியில் நிற்கிறார். இந்த மோசமான விபத்தில் என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வடக்கு ஈராக் நகரமான ஹம்தானியாவில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் அந்நாட்டில் நடந்த மிக மோசமான தீ விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
திருமண விழா: அங்கே வெகு சிறப்பாக இந்த திருமண விழா திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். அப்போது மணமக்களை வரவேற்கும் போது, அங்கே வானவேடிக்கைக்காக உள்ளே புஸ்வானம் போல வைத்துள்ளனர். அது அதிக உயரத்திற்குச் செல்லவே தீ பற்றியுள்ளது. மேலும், அங்கே அலங்காரத்திற்குப் பயன்படுத்தப் பொருட்கள் எளிதாக தீ பற்றும் வகையில் இருந்த நிலையில், தீ படுவேகமாக பரவியுள்ளது. இதனால் தான் பாதிப்பு இந்தளவுக்கு மிக மோசமாக இருந்துள்ளது.
இந்த மோசமான தீ விபத்தில் மணமக்கள் தப்பிவிட்ட போதிலும், அவர்கள் தாங்கள் நேசித்த அனைவரையும் இழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இந்த மோசமான விபத்தில், மணப்பெண் ஹனீன் தனது தாய், சகோதரர் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரைப் பறிகொடுத்துள்ளார். அதேபோல அவரது கணவர் ரேவனின் உறவினர்கள் 15 பேர் இந்த கொடூர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.