மியாமி: அமெரிக்காவில் ப்ளோரிடாவில் உள்ள மியாமியில் இருக்கும் மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியாகும் செய்திகள் இணையத்தை உலுக்கி உள்ளன.
10 அடி உயரமுள்ள வேற்றுகிரக ஏலியன் ஒன்று மியாமி ஷாப்பிங் மாலில் சுற்றித் திரிந்ததாக புகார்கள் வந்ததால், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பேசைட் மார்க்கெட்பிளேஸுக்கு வெளியே ஒரு பெரிய உருவம் உலா வருவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்ட அந்த மாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழப்பம்: அதேபோல் அந்த மாலுக்கு மேலே ஏலியனின் வாகனங்கள் என்று கூறப்படும் யுஎப்ஓ போன்ற பறக்கும் தட்டுகளின் வெளிச்சங்கள் தென்பட்டதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.
வீடியோ வைரலானவுடன், ஏலியன்கள் தொடர்பான ஊகங்களும் இணையம் முழுக்க பரவின. "மியாமி மாலில் வேற்றுகிரகவாசிகள் நடமாடியதாக பரவும் வதந்திகள் உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இவ்வளவு போலீஸை நான் ஒரே இடத்தில் பார்த்ததில்லை.. அங்கே எதோ ஒரு சம்பவம் நடந்து உள்ளது" என்று ஒரு X பயனாளி பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை: அதே சமயம் அங்கே 50 இளைஞர்கள் சேர்ந்து கலவரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கலவரம் குறித்தும் உறுதியான செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. அங்கே வானத்தில் விளக்குகள் இங்கும் அங்கும் நகரும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.