வார்சா: உக்ரைன் மீது ரஷ்யா தனது போரை நீடித்து வரும் நிலையில், நாங்கள் ரஷ்யாவுடன் போருக்கு தயாராக இருக்கிறோம் என போலாந்து தானாக முன்வந்து அறிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. போலாந்து ஏன் போருக்கு தயாராக வேண்டும்? அதற்கான காரணம் என்ன? இதன் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது அதிரடியான தாக்குதலை தொடுத்தது ரஷ்யா. இந்த போருக்கு முக்கியமான காரணம் அமெரிக்காதான். 1917 தொடங்கி 1990 வரை அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது சோவியத் ரஷ்யா. சாதாரண வேளாண் துறை தொடங்கி விண்வெளி துறை வரை சோவியத் தொடாத உச்சங்களே கிடையாது. இன்னைக்கு வரைக்கும் இதனை சமன் செய்ய முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
நேட்டோ: மறுபுறம் பொருளாதார வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது. எனவே சோவியத்தை வீழ்த்த அமெரிக்காவும், அமெரிக்காவின் சதிகளை முறியடிக்க சோவியத்தும் பரஸ்பரம் மோதிக்கொண்டே இருந்தன. இந்த காலத்தில்தான் அமெரிக்கா நேட்டோ எனும் கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் மூலம் தங்களுக்கு சாதகமான நாடுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கியது.
உடைந்த சோவியத்: ஆனால் கொஞ்ச நாட்களிலேயே சோவியத் யூனியன் உடைந்து, வெறும் ரஷ்யாவாக மாறியதால், சோவியத் காலத்தில் ரஷ்யாவின் கீழ் இருந்த நாடுகளான கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா மற்றும் அல்பேனியா ஆகியவை தனி நாடுகளாக பிரிந்தன. இதில் போலாந்து கவனிக்கப்பட வேண்டிய நாடாகும்.