சிங்கப்பூர், டிசம்பர்.26-
முன்னாள் வழக்கறிஞர் எம்.ரவியுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாகக் கூறிய 40 வயது ஆடவர், இன்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளார்.
போதைப் பொருள் உட்கொள்வதற்காக, கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, தாங்கள் இருவரும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சந்தித்துக் கொண்டதாக, அந்நபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாங்கள் கொண்டு வந்த போதைப் பொருளைப் பயன்படுத்திய சில மணி நேரங்களில், 56 வயதான ரவிக்கு, உடலில் அபாயகரமான அறிகுறிகள் தென்பட்டு, அவர் சுயநினைவை இழந்து விட்டதாகவும் அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரவிக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும், ஆனால் ரவி சுயநினைவிற்குத் திரும்பவில்லை என்றும் அந்த ஆடவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 5.41 மணியளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அந்த ஆடவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற அதிகாரிகள், சுயநினைவின்றி கிடந்த ரவியை மீட்டு, டான் தோக் செங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அவரைச் சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.








