ரபாத்: மொரோக்கோவில் மிக மோசமான பூகம்பம் ஏற்பட்ட நிலையில், அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. அங்கே மீட்புப் பணிகள் 3 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடக்கும் வருகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் குட்டி நாடான மொராக்கோவின் மொத்த மக்கள்தொகையே சுமார் 3.7 கோடி தான். இந்த சின்ன நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு 11 மணிக்கு இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் அங்குள்ள முக்கிய சுற்றுலா நகரான மராகேச் என்ற நகரில் இருந்து 72 கிமீ தொலைவில் தென்மேற்கே ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான பூகம்பத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் அப்படியே சரிந்தன.. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. மேலும், மொராக்கோவில் இவ்வளவு வலுவான நிலநடுக்கம் கடந்த பல ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டதே இல்லை.. இதனால் அங்கிருந்த கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் கட்டிடங்கள் அப்படியே சரிந்து விழுந்தன. இதுவே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாகக் காரணமாக அமைந்தது.
மொராக்கோவின் முக்கிய நகரங்களான ரபாத், காசாபிளாங்கா, எஸ்ஸௌயிரா எனப் பல இடங்களில் பாதிப்பு மோசமாக இருந்துள்ளது. 3 நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இப்போது மீட்புப் பணிகளில் மொராக்கோவுடன் ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளது. இன்று செப்.12ஆம் தேதி காலை வரை இந்த நிலநடுக்கத்தில் 2862 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 2,562 பேர் காயமடைந்துள்ளனர்.