இஸ்லாமாபாத்: சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இன்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கிரிக்கெட் வீரரான இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி உலககோப்பை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இம்ரான் கான் அரசியலில் நுழைந்தார். தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைத்த இம்ரான் கான் பிரதமரானார். இதற்கிடையே தான் கடந்த 2022ம் ஆண்டில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து இம்ரான் கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நில மோசடி, தோக்ஷகானா எனும் கருவூல ஊழல், அரசு ரகசியங்களை கசியவிட்டது, அரசு சொத்துகளை தவறாக பயன்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.