ஒட்டாவா: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மீது குற்றம்சாட்டியது ஏன்? என்பது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபர விளக்கமளித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசித்து வரும் சீக்கியர்கள் இந்தியாவை பிரித்து தனிநாடு வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வைப்பது காலிஸ்தான் தீவிரவாதிகள். இவர்கள் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து தனிநாடு கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்கியமான நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தூதரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். மேலும் இந்திய தேசியக்கொடிக்கு பதில் அவர்களின் கொடியையும் ஏற்றி அத்துமீறி நடந்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வசித்து வந்தார். இவர் மீது இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அவர் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த 2020ம் ஆண்டு இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது.