டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் கடுமையாகப் பாதித்துள்ளன நிலையில், அங்கே இப்போது நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கே சில பகுதிகளைச் சுனாமி அலைகளும் தாக்கியது. இதனால் அங்கே பதற்றம் ஏற்பட்டது.
பாதிப்பு மிக மோசம்: இந்த நிலநடுக்கம் மற்றும் அடுத்து ஏற்பட்ட சுனாமியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள சுஸு நகரம் இருக்கிறது. அங்கே இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து சுஸு நகர அதிகாரிகள், "தொடர் நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.. சிலருக்குக் காயமும் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இது குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், "மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கியிருப்பதாக எங்களுக்குப் பல புகார்கள் கிடைத்துள்ளது.. அங்கே சிக்கியுள்ள போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்" என்றார்.
சுஸு நகர்: ஜப்பானின் சுஸுவில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லும் சாலைகளும் சேதமடைந்ததால் மருத்துவர்களால் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு ஜப்பானில் சாலைகளில் பெரிய விரிசல் ஏற்பட்டு, இதனால் அங்கே போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.