டோக்கியோ: புத்தாண்டு தினத்தில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரே நாளில் சுமார் 150 பூகம்பம் ஏற்பட்டது. இதற்கான காரணத்தை நாம் இப்போது பார்க்கலாம்.
ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் புத்தாண்டு தினத்தன்று ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் கட்டிடங்கள் நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலேயே கட்டப்பட்டு இருக்கும். இதன் காரணமாகவே அங்கே இவ்வளவு பெரிய பூகம்பம் ஏற்பட்டும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது.
நிலநடுக்கம்: கடந்த 2011இல் அங்கே ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்ட நிலையில், அதேபோன்ற நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இதில் 24 மணி நேரத்தில் மட்டும் 150 நிலநடுக்கம் அங்கே ஏற்பட்டுள்ளது. ஜப்பான் உலகின் மிகவும் ஆக்டிவாக உள்ள நில அதிர்வு மண்டலங்களில் ஒன்றாகும். நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதன்மையானதாக ஜப்பான் இருக்கிறது.
ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதலில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நானோவில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
சுனாமி எச்சரிக்கை: இந்த நிலநடுக்கம் ஜன. 1ஆம் தேதி நாட்டின் ஜப்பான் கடலோரப் பகுதிகள் அனைத்திற்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது, பலரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது தான் இந்த பூகம்பம் தாக்கியுள்ளது. அத்துடன் 1.2 மீட்டர் உயரத்தில் சில சுனாமி அலைகளும் தாக்கியுள்ளது. இருப்பினும், அதில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.