சுவிட்சர்லாந்து: இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு எம்.பி.க்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
உலகத் தமிழர் இயக்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான கைதுகள்,துன்புறுத்தல்கள் ,கொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் என்பன இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் உரிமையும் நீதியும் தொடர்ச்சியாக மறுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழலில் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் பன்னாட்டு நீதிகோரி தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள்.
இவைதொடர்பில் சுவிட்சர்லாந்து அரசு விரிவான முறையில் ஆராய்ந்து செயற்படாமல் சிறீலங்கா அரசுடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறது. சுவிஸ் அரசின் இந்த நிலைப்பாடானது சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு ஐயப்பாட்டையே தோற்றுவித்து வருகின்றது.