இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதனால் காசா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம்காலமாக மோதல் நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அமைத்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடி தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கினர்.
இதில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 200க்கும் அதிகமானவர்கள பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தது. காசாவின் மீது இஸ்ரேல் ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் பலியாகினர். தற்போது காசாவில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. தற்போது வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாகவும், இன்னும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
11 வாரங்கள் கடந்தும் இன்னும் போர் நிற்கவில்லை. இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தினாலும் ஹமாஸ் அமைப்பை அழித்த பிறகு தான் போர் நிற்கும் எனும் வகையில் அந்நாடு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே போருக்கு நடுவே காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல நாடுகள் உதவிகள் வழங்கி வருகின்றன. காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்கு அனைத்து வகையான உதவிகள் கிடைக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா வலியுறுத்தியது. இதற்கிடையே தான் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவிடாமல் இஸ்ரேல் தடுப்பதாக ஐநாவில் குற்றம்சாட்டப்பட்டது. இதனை ஐநா மன்றம் மிகவும் சீரியஸான விஷயமாக கருதியது.