டோஹா, செப்டம்பர்.15-
ஹமாஸ் தலைமையைக் குறி வைத்து டோஹாவில் அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைக் கண்டித்து, இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அசாதாரண அரபு-இஸ்லாமிய உச்சி மாநாட்டில் மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றவுள்ளார்.
மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் கட்டாரின் டோஹா, ஹமாட் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த அன்வாருக்கு, கட்டார் துணைப்பிரதமர் ஷேக் சஓட் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தலைமையிலான அமைச்சரவைக் குழு வரவேற்பளித்தது.
இன்று கட்டார் உள்ளூர் நேரப்படி, மாலை 6.30 மணியளவில், தொடங்கவுள்ள இம்மாநாட்டில், காஸாவில் நடத்தப்பட்டு வரும் மனித நேயமற்றத் தாக்குதல்கள் குறித்து அன்வார் உரையாற்றவிருக்கிறார்.
அன்வாருடன், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், பிரதமர் துறை துணையமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசான் ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.