அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வடகொரியா தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவின் கூட்டாளியான தென்கொரியா மற்றும் ஜப்பான் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் வடகொரியா தீவிரமாக இருக்கிறது. ஆனால் இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டாளியுமான தென் கொரியாவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றம் நீடித்த வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி இருக்கிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய கூட்டு ராணுவ பயிற்சியாகும். அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே கடந்த 2018ம் ஆண்டு 'சுதந்திரக் கேடயம்' எனும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் வரை இரு நாடுகளும் போர் பயிற்சியை மேற்கொள்ளும். இந்த பயிற்சியில் இரு நாடுகளும் பின்பற்றி வரும் போர் தந்திரங்களை பகிர்ந்து கொள்ளும்.
இதேபோல ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தென்கொரியாவுடன் அமெரிக்க ராணுவம் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரு முறை விமான பயிற்சி என்றால் மறுபுறம் கடற்படை பயிற்சி. இப்படி சமீபத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருவது பக்கத்திலேயே இருக்கும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடகொரியா வழக்கம்போல தன்னுடைய ஏவுகணை பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது.