புதுடெல்லி, ஆகஸ்ட்.07-
இந்தியப் பொருட்களுக்கு வரி விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் 50 விழுக்காடு வரி விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார்.
விதித்த கெடு நிறைவடைவதற்குள், அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இரு மடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் வரை 25 விழுக்காடாக இருந்த வரி, இனி 50 விழுக்காடாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது நியாயமற்ற நடவடிக்கை என மத்திய அரசு கூறியுள்ளது.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் 17 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் நமது பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கும் போது, நாம் மட்டும் ஏன் 17 விழுக்காட்டுடன் நிறுத்த வேண்டும்? நாமும் வரியை 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குகிறோம் எனக்கூறி நமக்கு அமெரிக்கா கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கிறது. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து சீனா இரு மடங்கு கொள்முதல் செய்கிறது. அவர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கும்போது நமக்கு 3 வாரங்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நமக்கு அமெரிக்கா மறைமுகமாக ஏதோ ஒரு செய்தியை அனுப்புகிறது. மத்திய அரசு சூழ்நிலையை புரிந்து கொண்டு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என சசி தரூர் கூறினார்.