டாக்கா, அக்டோபர்.19-
வங்காளதேசத்தில் டாக்கா அனைத்துலக விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டதால் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஷ்ரத் ஷாஜலால் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அங்கு, இறக்குமதி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ பரவி மளமளவென எரியத் தொடங்கியது.
இதன் காரணமாக, விமான நிலையம் முழுவதும் புகை மண்டலமானது. தீயணைப்புப் படையினர் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தீ காரணமாக, டாக்கா விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. புறப்படத் தயாராக இருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.