Oct 25, 2025
Thisaigal NewsYouTube
ரீல்ஸ் வீடியோ அலப்பறை செய்த இருவர் கைது
உலகச் செய்திகள்

ரீல்ஸ் வீடியோ அலப்பறை செய்த இருவர் கைது

Share:

கலபுரகி, மார்ச்.19-

கர்நாடகாவில் ரீல்ஸ் வீடியோவுக்காக நடுரோட்டில் கொலை செய்வது போல நடித்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரீல்ஸ் மோகம் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்காக எத்தகைய பைத்தியக்காரத்தனமான செயல்களையும் செய்வதற்குச் சிலர் தயாராக உள்ளனர்.

அதில் ஆகக் கடைசியாக ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்து இருவர் பொதுமக்களை அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகாவில் கலபுரகி மாவட்டத்தில் ஹம்னபத் சாலை பரபரப்பாக காணப்பட்ட தருணத்தில் ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் ஆழ்ந்து இருக்க, ஒருவர் மற்றொருவரை நடுரோட்டில் ரத்தம் தெறிக்க, தெறிக்க கொலை செய்வது போல ஒரு சம்பவம் நடந்தது.

ரோட்டில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் ஒருவர் படுத்திருக்க, அவரின் மீது ஏறி உட்கார்ந்த மற்றொருவர் முகம் முழுவதும் ரத்தத்தை பூசியவாறு இரு கைகளையும் அகல விரித்து கத்துவது போல செய்திருக்கிறார். ஏதோ மிக பெரிய விபரீதம் அரங்கேறிவிட்டது என்று அங்கே இருந்த மக்கள் பீதி அடைந்து ஓட ஆரம்பித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கிருந்த இருவரிடம் விசாரிக்க, அவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யவே இவ்வாறு நடந்து கொண்டது தெரிய வந்தது.

உடனடியாக, இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News