கோலாலம்பூர், அக்டோபர்.22-
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காக, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்கு வருகை புரிய உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதனை மடானி அரசாங்கத்தின் பேச்சாளரான டத்தோ ஃபாமி ஃபாட்சீல் உறுதிப்படுத்தினார். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசியா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெறவுள்ள சந்திப்பு, மாந்தநேயம், பாதுகாப்பு வர்த்தகம் ஆகிய முக்கிய விவகாரங்களில் மலேசியாவின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதற்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக காஸா நெருக்கடி குறித்த மலேசியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்கும், பொருளாதாரத் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இஃது ஒரு முதன்மை வாய்ப்பை வழங்குகிறது.
ஹமாஸ், இஸ்ரேல் இடையே தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ள சண்டையை நிறுத்தும் ஒப்பந்தத்தை மலேசியா வரவேற்பதாகவும், இஃது ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாட்டிற்கான அடித்தளமாக அமையும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். மேலும், எகிப்து, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் மலேசியா தீவிரமாகப் பேசி வருவதாகவும், ஐ.நா.வின் சிறப்பு அமர்வில் காஸாவிற்கு அமைதி காக்கும் படையை அனுப்புவது குறித்துப் பொதுவான கருத்தை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முகமட் ஹசான் தெரிவித்தார்.








